கலைஞரின் 85-வது பிறந்த நாளில் அவருக்கு அர்பணிக்கும் கவிதை.
புரட்சியாளர் ” சே குவேரா “-வின் 80-வது பிறந்த நாள் (14-06-1928) நினைவுக் கவிதை
புரட்சியாளர் ” சே குவேரா “
சே குவேரா!
நீ வேறா? புரட்சி வேறா?
இல்லை
நீ புரட்சியின் வேரா?
” சே குவேரா “
உன் பெயர் உச்சரிக்கையில்
என் உச்சிமயிர் சிலிர்க்கிறதே!
உள்ளத்தில் தீ மூள்கிறதே!
ஏனோ சிலர் உனை
அலங்காரப் படம் ஆக்கிவிட்டனர்
ஆயத்த ஆடைகளில்
தெரிந்தோ? தெரியாமலோ?
ஏகாதிபத்தியத்தின் வியாபாரத் தந்திரமோ?
ஏகோபித்த வசீகரச் சின்னமோ? – நீ
” ரொசாரியோ “
நீ பிறந்த ஊராக இருக்கலாம்
இன்றும் நீ வாழும் ஊர்
புரட்சி விதைக்கப்பட்ட இளைஞர்களின் ” இதயூர் ” (இதய ஊர்)
தோட்டா உனை நோக்கிப் பாய்ந்தாலும்
காட்டாதே உன் முதுகு – புறமுதுகு!
சங்கத்தமிழ் பயின்றவனோ ?!
உன் தாய் தமிழச்சி மரபணு கொண்டவளோ ?!
நீ பிறந்த மாதம் ஜுன் (14-06-1928)
என் ஆசான் கலைஞர் பிறந்த மாதமும் ஜுன் (03-06-1923)
முத்தமிழ் அறிஞர் கலைஞரோ உனக்கு – அண்ணன்
நீயோ! அவர் இதயத்தில் என்றென்றும் – புரட்சி மன்னன்.
எண்பத்தைந்து அகவையிலும் எழுதுகிறார் ஏட்டில்
உன் எண்பதாவது அகவையாண்டில்
உனது கியூபப் புரட்சியை, பாடிஸ்டா வீழ்ச்சியை
யாருக்காக? இளைஞர்களே! நமக்காக.
நீ மருத்துவராய்
மோட்டார் சைக்களில் பயனித்து,
ஏகாதிபத்தியத்தின் சுரண்டலையும், கம்யூனிசத்தின் அவசியத்தையும்
கண்டுணர்கிறாய் புரட்சியாளனாகிறாய்!
மோட்டார் பயணம் புரட்சிப்பயணமாகிறது.
எல்லைகள் கடந்தாய், ” பிடல் காஸ்ட்ரோ ” நண்பரானார்
கியூபப் புரட்சி கண்டாய், பாடிஸ்டாவை வெண்றாய்!
காங்கோ சென்றாய், பொலிவியா சென்றாய்…
புரட்சியாளனின் பயணம் முடிவதில்லை
தொட்ர்வது, தொடர்ந்துகொண்டே இருப்பது.
இயேசுவைக் காட்டிக்கொடுக்க ” யூதாஸ் ” இருந்தான்
ஐந்து வெள்ளிக்காசை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டு
” சே குவேரா ” ஐக் காட்டிக்கொடுக்க ஒருவள் இருந்தாள்
ஐம்பது பெஸோக்களை ” சே குவேரா ” விடம் பரிசாக வாங்கிக்கொண்டு.
அன்று அக்டோபர் – 9, மதியம் 1.10 மணி
” கோழையே! சுடு,
நீ சுடுவது ” சே “-வை அல்ல
ஒரு சாதாரண மனிதனை “.
தோட்டா ஒன்று ” சே “-யின் இதயத்தை துளைத்தது
கோடானகோடி இதயங்களில் விதைக்கப்பட்டது ” புரட்சி “!
புரட்சியாளன் என்றும் இறப்பதில்லை
விதைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறான்
களர் இதயங்களில் அல்ல
விளை இதயங்களில்.
ஒடுக்கப்பட்டவர்களின் பயணம் உலகமெலாம் தொடர்கிறது
அடக்குமுறைக்கு எதிராக,
மொழி, இனம் காத்திட
மறவன் சேனையாக, இளைஞர் பட்டாளமாக……
– ஜோவியா


