முதிர்கன்னி

“இந்தப்பூக்கள் விற்பனைக்கல்ல” என்ற வைரமுத்துவின் கவிதைத் தொகுப்பில் “முதிர்கன்னி” என்ற கவிதை எனக்குள் ஏற்படுத்திய உணர்வின் வெளிப்பாடே நான் எழுதும் இந்த “முதிர்கன்னி”

முதிர்கன்னி

தாலாட்டி, சீராட்டி,
நல்லமுது, நிலாச்சோறூட்டி,
இரட்டைச் சடை, சிண்டு, ஒற்றைப்பூவென
அழகு பார்த்து வளர்த்த நல்பெற்றோரே!
வயசுக்கு வந்தவுடன்
உறவெல்லாம் சொல்லி விருந்து வெச்சீங்க
“இந்தப் பூ” விற்பனைக்கென சமிக்ஞை தந்தீங்க.

முதலில் நாட்கள் ஓடின
இப்ப வருடங்கள் ஓடுது
பெட்ரோலும் தீரப்போகுது
ஜனனப்பெட்ரோலும் தீரப்போகுது.

தத்துவம் பேசி, மத ஒழுங்கு கடைபிடிச்சு
சமுகக்கட்டுக்குள் சிறைபட்டிருக்கும் மக்களே!
நாங்கள் (முதிர்கன்னி) உட்பட
விடுதலையாக சுதந்திரக் காட்டில்
இயற்கையுடன் இயற்கையாக வாழ்ந்திருந்தால்
நான் இந்நேரம் பாட்டியாயிருப்பேன்.

நான் கன்னியாக இருந்தபோது கண்ணாடி பார்த்தால்
பருவப் பூரிப்புப் பரவசத்தில்,
“பருவக் காயிரண்டைக் கனியவைக்க யார் வருவா
பருவக் காளையது பருவத்தில் வருமா
கல் வைத்துக் கனியவைக்குமா
கண், கை வைத்து கனியவைக்குமா” என
மனக்கவிதை எழுதிய காலமும் போச்சே!

நான் இப்போதும் அதே கண்ணாடி பார்க்கிறேன்
என் நிர்வாண உடல் பார்க்கிறேன்
காரித் துப்புகிறேன்
முலையிரண்டும் ஊஞ்சலாகி விழுதாகிறது
சங்ககாலப்பெண் முறத்தால் புலியை விரட்டினாலாமே
என் முலையிரண்டையும் அறுத்தெறிகிறேன் காகத்திற்கு
நீண்ட நகங்களை வெட்டுவதில்லையா?

நீங்கள் விரதம் இருக்கிறீர்கள்
நானும் விரதம் இருக்கிறேன்
எனது விரதம் “விரகதாபம்”
எனது விரதத்திற்கு முடிவில்லை.

இரவு நேரத்தில்,
இரவு படர்ந்த தேசங்களிலிருந்து வரும்
புணர்ச்சிகளின் முணங்கல்களும், மூச்சின் உச்ச ஸ்தாதியும்
எங்களுக்கு மட்டும் கேட்கிறது
விழிகளில் இருந்து வழியும் கண்ணீர்
காதை அடைகிற நேரத்தில்
சூரியன் விழித்து விடுகிறான்.
எங்கள் விழிகள் தூங்குவதில்லை
“தூக்கமின்மை”
எங்களைப் பார்த்துச்சென்ற வரன்கள் தந்த
“வரனிதட்சனை”.

“தனி ஒருவனுக்கு உணவில்லை என்றால்
ஜகத்தினை அழி” என்றான் பாரதி.
என் பசி தீர்க்க யாரை அழைப்பது பாரதி
மன்னிக்கவும்
என் பசி தீர்க்க யாரை அழிப்பது பாரதி.

தலைவியின் சிறிதுகால தலைவர் பிரிவை
காமத்துப்பாலில் பத்துக் குறளில் தந்தார் வள்ளுவர்
எங்களுக்கு எந்தக் குறள் தந்தார்
உன் அனுமதியுடன்
1331-வது குறளை நானே எழுதுகிறேன்
“பூப்பெய்தி ஆண்டோடி விலக்கு மாய்ந்து
விரகதாபமுற்றி முதிர்கன்னியென்ற நடைபிணம்”.

- ஜோவியா

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s


Follow

Get every new post delivered to your Inbox.