Tamil Poem 8

By joviya

முத்தம்

முத்தம் என்பது தான் என்ன?
இரு இதழ்கள் இணைந்த பதிப்பா?
அல்லது
இரு இதழ்கள் திறந்த பிடிப்பா?
பதிப்போ! பிடிப்போ!
எதுவாயினும் இருக்கட்டும்.

முத்தம் ஓர் மொழி
முதல் மொழி,
முத்தான மொழி,
மனிதகுலத்தின் செம்மொழி
இல்லை
உயிரினத்தின் உச்சமொழி.
எச்ச மொழியென்று யாரும்
கொச்ச மொழி பேசாதீர்.

மொத்தத்தில் முத்தம்
பாச மொழி
காம மொழி என
விழி இரண்டாய்
இனம் இரண்டாய்
முத்த மொழி இரண்டு.

முத்தம்
இரு இதழ்கள் இணைந்த பதிப்பானால்
பாசமொழி, நேசமொழி, அன்புமொழி.
முத்தம்
இரு இதழ்கள் திறந்த பிடிப்பானால்
காம மொழி.

பாசமொழி
பால் பேதமற்ற மொழி,
அகவை அற்ற மொழி,
எல்லோரும் நவின்ற மொழி.
காம மொழி
வேற்று பால் உணரும் மொழி,
பருவத்தால் பயின்ற மொழி,
கலவி இன்பத்தின்
பிள்ளை மொழி,
பிள்ளையார் சுழி!

முத்தம் எதுகையும் மோனையும் அமைந்த
நல் கவிதை
இது ஓர் மரபுக்கவிதை.
கண்ணத்தில் முத்தமிட்டால்
இருவரி திருக்குறள்
இதழோடு இதழ் கவ்வி முத்தமிட்டால்
நால்வரி நாலடியார்.

முத்தம் இடுவீர்!
முத்த மொழி மொழிவீர்!
முத்தத்தால் யாரும் மடியார்
இக்கவிதை எழுதியதால்
என்னை யாரும் அடியார்.

  – ஜோவியா

ஒரு பதில் “Tamil Poem 8” க்கு;

  1. Sivakumar சொல்வதென்னவென்றால்:

    ரசித்து எழுதியிருக்கிறீர்கள் போல…

மறுமொழி இடுக